இனி மெட்ரோவில் ‘இதை’ கட்டாயம் செய்யணும்…! மீறினால் சிக்கல்…? மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு…!!

By Swetha on ஆனி 16, 2026

Spread the love

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை ஊக்குவிக்கவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் “மெட்ரோ மேனர்ஸ் – பொறுப்பான பயணம், பாதுகாப்பான பயணம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் நடத்தியது. தேசிய மாணவர் படையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வின் மூலம், பயணிகள் நெரிசல் இன்றி வரிசையாகச் செல்வதையும், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் பயணிப்பதையும் வலியுறுத்தி, பொறுப்பான பயணிகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பது எடுத்துரைக்கப்பட்டது.

பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், பயணத்தை சிரமமற்றதாக மாற்றவும் மெட்ரோ நிர்வாகம் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ இரயிலில் ஏறுவதற்கு முன், உள்ளே இருக்கும் பயணிகள் முதலில் கீழே இறங்க வழிவிட வேண்டும்; இரயில் கதவுகளுக்கு அருகில் நின்று மற்றவர்களுக்குத் தடையாக இருக்கக்கூடாது; நடைமேடையில் இரயிலுக்காகக் காத்திருக்கும்போது பாதுகாப்பு மஞ்சள் கோட்டைத் தாண்டாமல் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், நகரும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும்போது மற்றவர்களுக்கு வழிவிடும் வகையில், “இடப்பக்கம் நில்லுங்கள், வலப்பக்கம் நடங்கள்” என்ற முறையைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இவற்றுடன், பொது இடங்களில் சக பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படாத வண்ணம் பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் மெட்ரோ நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இதன்படி, இரயிலில் பயணம் செய்யும்போது பாடல்கள் கேட்பதற்கோ அல்லது வீடியோக்கள் பார்ப்பதற்கோ கட்டாயம் ஹெட்போன்களைப் பயன்படுத்த வேண்டும் எனப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய முன்னெடுப்புகள் மூலம் சென்னை மெட்ரோ ரயில் சேவையை மேலும் பாதுகாப்பான மற்றும் நேர்த்தியான பொதுப் போக்குவரத்தாக மாற்ற மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.