என் மனமெல்லாம் தீராத வேதனை… தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவால்… என் உயிருக்கு உயிரான இயக்கத்தை… சி.விஜயபாஸ்கர் உருக்கம்…!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்து, தான் சார்ந்துள்ள இயக்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மகத்தான மக்கள் இயக்கத்தில், ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, தனது மாணவப் பருவத்திலிருந்து கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டாவது தலைமுறையாக இந்த இயக்கத்தோடு தனது வாழ்க்கைப் பாதையை அர்ப்பணித்து பயணித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு இந்த இயக்கம் என்பது வெறும் அரசியல் அமைப்பு மட்டுமல்ல என்றும், அது தனது உணர்வு, அடையாளம் மற்றும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாணவர் அணியில் தொடங்கி எழுச்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் களங்கள் என தன்னை ஒரு அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக இந்த இயக்கம் வழிநடத்தியதாகக் கூறியுள்ள அவர், தனது இளமை, உழைப்பு, கனவுகள் அனைத்தும் இதனுடன் பின்னிப்பிணைந்தவை என்றும், அம்மா வாழ்ந்த பொற்காலத்தில் பணியாற்றியதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

   

இருப்பினும், தற்போதைய சூழலில் தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால், தான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி தனது அரசியல் பயணத்தைத் தொடர்வது சரியாக இருக்காது என்ற உணர்வோடு, கணத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும் இந்த இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகும் முடிவை எடுப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

   

தான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல, மாறாகத் தனது வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்திலிருந்து என்று குறிப்பிட்டுள்ள சி. விஜயபாஸ்கர், இதுவரை தன்னுடன் பயணித்த கழகத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும், தனது மண்ணுக்கான மற்றும் மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம் போல் எப்போதும் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.