தவெக வலையில் விழும் பெரிய திமிங்கலம்..? இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்.. அதிமுக கோட்டையில் ஆட்டம் காட்டிய விஜய்..!!

By Soundarya on ஆனி 3, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம் அதிமுகவுக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி அதிருப்திகளுக்கு இடையே, அக்கட்சியின் நான்கு எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். இந்தச் சூழலில், அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்த பாதையில் செயல்படத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து பல எம்.எல்.ஏக்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த நிலையிலும், சி.விஜயபாஸ்கர் மட்டும் அந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நேரடியாகத் தனது சொந்த தொகுதியான விராலிமலைக்குத் திரும்பிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து தீவிரமாக யோசித்து வருகிறார்.

   

விஜயபாஸ்கர் தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து வட்டம், ஒன்றியம், நகர நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்களைத் தனித்தனியாகச் சந்தித்துத் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டங்களின் போது, “நீங்கள் எந்த மாதிரியான அதிரடி முடிவை எடுத்தாலும் நாங்கள் எப்போதும் உங்களுடனேயே இருப்போம்” என்று அவரது ஆதரவாளர்கள் அவருக்கு முழு ஆதரவையும் உறுதியையும் அளித்துள்ளனர்.

   

இந்த அரசியல் நகர்வுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக, புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகச் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தற்போது கூடுதல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஸ் முன்னிலையில் விஜயபாஸ்கரின் முக்கிய ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏற்கனவே த.வெ.க-வில் இணைந்து வருவதால், சி.விஜயபாஸ்கரும் விரைவில் விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைவது உறுதி என்று அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.