அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தில் புகழ்பெற்ற கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து காணிக்கைப் பணம் மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய அரிவாள்களைக் கொள்ளையடித்துச் சென்றார். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதேவேளையில், கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கிராம மக்களும் கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீண்டும் அப்பகுதியில் நடமாடியதை அறிந்த கிராம மக்கள், அவரை மடக்கிப் பிடித்து கோவில் அறைக்குள்ளேயே வைத்து பூட்டினர். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார் அந்த நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் வடவீக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அவர்தான் கருப்புசாமி கோவிலில் உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து, அவ்வப்போது பணம் மற்றும் அரிவாள்களைத் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டார். மேலும், அப்பகுதியில் நடந்த மின்மோட்டார் காப்பர் வயர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் இவருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
