தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். வரும் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பாடுபடுவோம் என்றும் அந்த இளைஞர்கள் கூட்டாக உறுதியளித்துள்ளனர். சமீபகாலமாக அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் தவெகவை நோக்கிப் படையெடுத்து வரும் வேளையில், அதற்கு நேர்மாறாகத் தவெக இளைஞர்கள் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திடீர் கட்சித் தாவல் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தவெகவின் உட்கட்சி அரசியல் மற்றும் எதிர்கால வியூகங்கள் குறித்த கேள்விகளை இது எழுப்பியுள்ளதாக ஒரு தரப்பினரும், தேர்தல் நெருங்கும் வேளையில் இளைஞர்களின் இந்த முடிவு அதிமுகவிற்குப் கூடுதல் பலத்தையும், புதிய உற்சாகத்தையும் தரும் என்று மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இணையத்தில் நெட்டிசன்களிடையே இந்த விவகாரம் தற்போதைய ஹாட் டாபிக்காக உலா வருகிறது.
