அடுத்த குட் நியூஸ்…. முதல்வர் விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த மாஸ் அப்டேட்….!

By Nanthini on ஆனி 1, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பொறுப்பேற்ற மூன்று வாரங்களிலேயே அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் விமர்சனங்களை எழுப்பி வரும் வேளையில், தவெக அமைச்சர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவையில் ஆய்வு செய்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்து, துறையின் அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த முக்கிய விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

   

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் தமிழ்நாட்டில்தான் நடப்பதாகக் கவலை தெரிவித்தார். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18,000 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர் என்றும், இது கொரோனா கால மரணங்களை விட அதிகம் என்றும் குறிப்பிட்டார். இந்த விபத்துகளுக்கு அதிவேகப் பயணமும், முறையான சிக்னல்கள் இல்லாததும், கிராமப்புறங்களை இணைக்கும் பாதுகாப்பான சாலைகள் இல்லாததுமே முக்கியக் காரணங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய அரசுகள் சாலை உள்கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்குப் பாதுகாப்பிற்குச் செலவிடவில்லை என்று விமர்சித்த அவர், வரும் பட்ஜெட்டில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடவுள்ளார் என்றும் கூறினார்.

   

மேலும், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்தைத் தடுத்து, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப விளையாட்டுத் துறையில் அதிக கவனம் செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கேரள அரசு போக்குவரத்து விதிமீறல்களுக்குக் கடுமையான நடவடிக்கை எடுப்பது போல, தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றார். பள்ளிப் பருவத்திலேயே தொடங்கும் போதைப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் மேம்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.

 

குறிப்பாக, கோவை நேரு ஸ்டேடியம் சென்னை நேரு ஸ்டேடியம் போன்ற சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கான வசதிகள், மைதானங்கள் குறித்த விபரங்கள் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் மாவட்ட வாரியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மண்டலங்களை மையமாகக் கொண்டு தமிழக விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தவெக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான விரிவான திட்டத்தை முதலமைச்சர் விஜய் மிக விரைவில் முறைப்படி அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டினார்.