“இன்று ஒருநாள் மட்டும்” சொத்துப் பதிவு செய்வோருக்கு பத்திரப்பதிவுத்துறை குட் நியூஸ்…!!

By Soundarya on வைகாசி 29, 2026

Spread the love

சுபமுகூர்த்த தினமான இன்று (மே 29) தமிழகத்தில் நிலம் மற்றும் சொத்துப் பதிவுகள் அதிகளவில் நடைபெறும் என்பதை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி பத்திரப் பதிவு செய்யக் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்து பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, வழக்கமாக ஒரு சார்பதிவாளர் மட்டுமே உள்ள அலுவலகங்களில் நாளொன்றுக்கு வழங்கப்படும் 100 டோக்கன்களின் எண்ணிக்கை தற்போது 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, இரண்டு சார்பதிவாளர்கள் பணிபுரியும் பெரிய அலுவலகங்களில் வழக்கமான 200 டோக்கன்களுக்குப் பதிலாக, இன்று 300 டோக்கன்கள் வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகின்றன.

மேலும், மாநிலம் முழுவதும் சொத்துப் பரிமாற்றங்கள் மற்றும் பத்திரப் பதிவுகள் மிக அதிகமாக நடைபெறும் முதன்மையான 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவசரத் தேவைகளுக்காக வழங்கப்படும் தட்கல் டோக்கன்கள் 12-லிருந்து 16 ஆக உயர்த்தப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. முகூர்த்த நாட்களில் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும் இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பதிவுத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.