“நடுங்க வைக்கும் உண்மை” மூதாட்டி மரணத்தில் திடீர் திருப்பம்.. பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த கொலைக் குற்றம்.. சிக்கிய தவெக பொறுப்பாளர்..!!

By Soundarya on வைகாசி 29, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கீழாமூர் கிராமத்தில் முத்தாலு (75) என்ற மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்ததாகக் கருதப்பட்டு, உறவினர்களால் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. எனினும், அவர் அணிந்திருந்த சுமார் 5 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் கம்மல் உள்ளிட்ட நகைகள் காணாமல் போனதால், அவரது மகன்களுக்கு மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கிளை பொறுப்பாளர் வாசுதேவன் என்பவர், நகைக்காக மூதாட்டியை கீழே தள்ளி கொலை செய்துவிட்டு நகைகளைத் திருடிச் சென்றது அம்பலமானது. இந்த கொடூரக் குற்றத்தைத் தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் புதைக்கப்பட்ட மூதாட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளி வாசுதேவனை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.