மைதானத்தில் லேசர் ஷோ… சிதைக்கப்பட்ட இந்திய வரைபடம்..? பிசிசிஐ-யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…!!

By Swetha on வைகாசி 27, 2026

Spread the love

ஐபிஎல் 2026 தொடரின் முதலாவது தகுதிச் சுற்று போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் தர்மசாலாவில் உள்ள ஹெச்பிசிஏ மைதானத்தில் மோதின. இப்போட்டியின் நடுவே மைதானத்தில் லேசர் விளக்கு ஒளிக்காட்சி (light show) நடத்தப்பட்டது. அப்போது ஐபிஎல் கோப்பை வடிவத்திற்குள் இந்தியாவின் வரைபடம் போன்ற ஒரு கிராபிக்ஸ் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், அதில் காட்டப்பட்ட இந்தியாவின் வரைபடம் சிதைந்த நிலையில் தவறாக இருந்ததால் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்த லேசர் ஒளிக்காட்சியில் காட்டப்பட்ட வரைபடத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் சிலிகுரி காரிடார் (“சிக்கன்ஸ் நெக்”) பகுதி சரியாகக் காட்டப்படவில்லை. இதனால் வரைபடத்தின் வலது பக்கம் புவியியல் ரீதியாக மிகவும் தவறாகவும், முழுமையற்றதாகவும் காட்சியளித்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சில எல்லைப் பகுதிகள் விடுபட்டது போலவும், தெளிவற்ற முறையிலும் சித்தரிக்கப்பட்டிருந்தன. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், நாட்டின் வரைபடம் தவறாகக் காட்டப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

இதைக் கண்ட சமூக வலைதளவாசிகள் (Netizens) மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ (BCCI) மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கை கடுமையாக சாடி வருகின்றனர். இது வெறும் கிராபிக்ஸ் பிழை அல்ல என்றும், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான தீவிரமான விஷயம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தேசத்தின் மீதான பெருமை என்று சுட்டிக்காட்டியுள்ள ரசிகர்கள், இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.