ஷட்டரைத் திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தைக்குட்டி.. நடந்தது என்ன..?

By Swetha on வைகாசி 27, 2026

Spread the love

மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் உள்ள ‘ராம்புரி கேம்ப்’ என்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதிக்குள், சுமார் 9 முதல் 10 மாதங்கள் மதிக்கத்தக்க ஒரு சிறுத்தைக்குட்டி திடீரென நுழைந்தது. அங்குள்ள ஒரு குடோனின ஷட்டரைத் திறந்த ஊழியர் ஒருவர், உள்ளே சிறுத்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகத் தகவல் கொடுத்தார். இந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவியதால், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது.

தகவல் அறிந்தவுடன் வனத்துறை அதிகாரிகள், உள்ளூர் காவல் துறையினர் மற்றும் அமராவதி மாநகராட்சியின் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுத்தையைக் காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசாருக்குப் பெரும் சவாலாக இருந்தது. இதற்கிடையில், அந்தச் சிறுத்தை அங்கிருந்த ஒரு நாட்டுச் சாராயக் கடைக்குள் புகுந்ததை அடுத்து, அது தப்பி ஓடாதவாறு கடையின் கதவுகள் மூடப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டது.

   

சுமார் 2 முதல் 3 மணி நேரம் நீடித்த இந்தத் தீவிர மீட்பு நடவடிக்கையின் முடிவில், வனத்துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அதைக் கட்டுப்படுத்தினர். பின்னர், மயக்கமடைந்த சிறுத்தையைப் பத்திரமாகக் கூண்டில் அடைத்து, மருத்துவப் பரிசோதனைக்காக ‘வதாலி’ வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த மீட்புப் பணியில் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.