பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடிப்பில் வெளியான ‘சந்த் மேரா தில்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பரதநாட்டிய நடனக் காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் நெட்டிசன்களின் கடுமையான கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் அனன்யா பாண்டே பரதநாட்டியம் மற்றும் ஹிப்-ஹாப் நடனங்களை இணைத்து ஒரு ஃபியூஷன் (Fusion) நடனத்தை ஆடியுள்ளார். கல்லூரி விழா ஒன்றில் அவர் ஆடுவது போன்ற இந்த வீடியோ கிளிப் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் பாரம்பரிய கலை வடிவத்தை அவர் கேலி கூத்தாக்கியுள்ளதாகக் கூறி விமர்சித்து வருகின்றனர்.
இந்த நடனக் காட்சியில் அனன்யா பாண்டேவின் உடல் அசைவுகள் மிகவும் கடினமாகவும், எவ்வித முகபாவனைகளும் இன்றியும், ஒரு ‘ரோபோட்’ ஆடுவது போலவும் இருப்பதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 2000 ஆண்டுகள் பழமையான மற்றும் பெருமைமிக்க ஒரு பாரம்பரிய நடனக் கலையை பாலிவுட் சினிமா இப்படிச் சீரழிப்பதா என்றும், நடனக் காட்சியின் பின்னணியில் நடராஜர் சிலையை வைத்துக்கொண்டு இதுபோன்ற அரைகுறை நடனத்தை ஆடியிருக்கக் கூடாது என்றும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல நடனக் கலைஞர் அனிதா ரத்னமும், “இந்த நடனம் பரதநாட்டியத்தின் மீதான ஒரு பேரழிவுகரமான தவறான புரிதல்” எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மறுபுறம், இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அனன்யாவின் தந்தை சுங்கி பாண்டே மற்றும் படத்தின் உதவி நடன இயக்குனர் அனன்யா குரூப் ஆகியோர் ஆதரவாகப் பேசியுள்ளனர். இது முறையான பரதநாட்டியம் அல்ல என்றும், கல்லூரி மாணவர்கள் மேடைகளில் ஆடும் ஒரு நவீன ஃபியூஷன் நடனம் மட்டுமே என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், மிகக் குறுகிய காலத்தில் அனன்யா பாண்டே இந்த நடனத்திற்காக எடுத்த கடின உழைப்பைப் பாராட்ட வேண்டுமே தவிர, இப்படித் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது தவறு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
