திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த சொரியன்கிணத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (37). கூலித் தொழிலாளியான இவருக்கும், சோபியா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்து, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு காவியாஸ்ரீ (5), தன்னயா ஸ்ரீ (2) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகத் தொடங்கிய இவர்களது குடும்ப வாழ்க்கையில், நாளடைவில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சோபியா கோபித்துக்கொண்டு மூலனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதும், பின்னர் குமரேசன் அவரைச் சமாதானம் செய்து அழைத்து வந்து குடும்பம் நடத்துவதும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று காலையும் இவர்களுக்குள் வழக்கம்போல கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலும் ஆத்திரமும் அடைந்த சோபியா, திடீரென வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த குமரேசன், பதற்றத்துடன் வீட்டின் மேற்கூரை (ஓடு) மீது ஏறிப் பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது சோபியா வீட்டிற்குள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினரின் உதவியோடு வீட்டின் கதவை உடைத்து, மயங்கிய நிலையில் இருந்த சோபியாவை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சோபியாவை தீவிரமாகப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக 5 வயது மற்றும் 2 வயதுக் குழந்தைகளைத் தவிக்க விட்டு, இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட கொடூரச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
