தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து (TNCSC) சரியான எடையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தப் புகாரில், கடந்த காலங்களைப் போலவே தற்போதும் TNCSC குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் அனுப்பப்படும் போது, மூட்டைகளில் பெரும் அளவில் எடை குறைவாக அனுப்புவது தொடர்கதையாகவும் வாடிக்கையாகவும் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் கடைகளில் பொதுமக்களுக்குப் பொருட்களை விநியோகிக்கும் போது ஊழியர்கள் பல்வேறு தேவையற்ற சச்சரவுகளையும், மன உளைச்சல்களையும் சந்திக்க நேரிடுகிறது என்று அந்த கடிதத்தில் ஊழியர்கள் சங்கம் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், மாநிலத்தில் பெரும் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கிப் பொறுப்பேற்றுள்ள இந்த புதிய அரசின் செயல்பாடுகளும், அதற்கு ஏற்றாற்போல் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் மிக அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது. பொருட்கள் விநியோகத்தில் ஆரம்பக் கட்டத்திலேயே நடக்கும் இந்த எடை மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே, ரேஷன் கடை ஊழியர்கள் மீதான மக்களின் தவறான பார்வை மாறும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். புதிய ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்திடமிருந்து முதலமைச்சர் விஜய்க்கு நேரடியாகச் சென்றுள்ள இந்த அதிரடிக் கடிதம், கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
