டிரம்பின் ஒற்றை ட்வீட்.. நள்ளிரவில் நடுங்கிய ஈரான்: இன்னும் சில மணி நேரங்களில் உலகப் போர்?… நடுங்கும் உலக நாடுகள்….!

By Nanthini on வைகாசி 26, 2026

Spread the love

ஈரான் உடனான போர் இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்றும், அமைதி ஒப்பந்தம் இறுதியாகும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் நம்பிக்கை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, ஈரானின் தென்பகுதி மற்றும் சர்வதேச எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்க ராணுவம் அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்தத்தை மீறி, பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் உளவு ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதே இந்த மோதலுக்கு உடனடி காரணமாக அமைந்துள்ளது. இதற்கு பதிலடியாக, ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானியப் படகுகளை இலக்கு வைத்து அமெரிக்காவின் ‘சென்ட்காம்’ (CENTCOM) படைப்பிரிவு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த திடீர் ஏவுகணைத் தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஈரானின் மிக முக்கியமான கடற்படை மற்றும் விமானப் படைத் தளமான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) நகரை நிலைகுலையச் செய்துள்ளது. பந்தர் அப்பாஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த தாக்குதல்களை முறியடிக்க பந்தர் அப்பாஸ் நகரின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயல்பட்டுப் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதேபோன்ற பயங்கர வெடிச்சத்தங்கள் பாரசீக வளைகுடாவின் சிரிக் மற்றும் ஜாஸ்க் பகுதிகளிலும் கேட்டுள்ளதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில் கூறுகையில், போர்நிறுத்தக் காலத்தில் தாங்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடித்த போதிலும், தங்களது படைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது தற்காத்துக் கொள்ளும் உரிமையின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளது.

   

தோஹாவில் இருக்கும் ஈரான் தூதர்கள் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பேசாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முகமது பாகர் சொல்காத்ர் அமெரிக்காவுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் இந்தத் தார்மீகப் போரில் எவ்வித பின்வாங்கலும் கிடையாது என்றும், போர்க்களம் மற்றும் ராஜதந்திரக் களம் என அனைத்து முனைகளிலும் தங்களது மக்கள் காட்டிய வீரம் தான் எதிரியை மண்டியிட வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், இந்தத் தாக்குதல்கள் ஒருபுறம் நடந்தாலும், கத்தாரின் பிரதமர் முன்னிலையில் ஈரானின் தலைமைப் பேச்சாளர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் ஹேமதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு அமெரிக்க அதிகாரிகளுடன் தோஹாவில் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் அமைதி ஒப்பந்தம் சாத்தியமில்லை என ஈரான் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார்.

   

புதிய தாக்குதல்கள் நடந்த சில மணிநேரங்களிலேயே டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஈரான் தனது அணுசக்திப் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைத்து அழிக்க வேண்டும், இல்லையெனில் சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் முன்னிலையில் ஈரானிலேயே வைத்து அதனை அடியோடு அழிக்க வேண்டும் என புதிய நிபந்தனையைப் போட்டுள்ளார். ஆனால், டிரம்ப் குறிப்பிட்டுள்ள அந்த ‘அணுசக்தி ஆணையம்’ 1974-லேயே கலைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்தும் ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ கட்டாயமாகக் கையெழுத்திட வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் இதில் கையெழுத்திட்டிருந்தாலும், சவூதி அரேபியாவும் கத்தாரும், பாலஸ்தீனத்திற்குத் தனி நாடு அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலுடன் எந்தவொரு சமரசமும் செய்ய மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளதால் வளைகுடா பகுதியில் அமைதி திரும்புவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.