தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கள்ளக்காதல் தகராறில் தற்காலிக பேருந்து ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது உடலை நள்ளிரவில் வீட்டின் வாசலில் வீசிச் சென்ற பெண்ணும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமியின் மகன் நவீன்குமார் (25), கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வீட்டு வாசலில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
நவீன்குமாரின் கழுத்தில் கயிறு நெரித்ததற்கான அடையாளம் இருந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள், அதே பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண் தான் நவீன்குமாரைக் கொலை செய்ததாகக் கூறி பாலக்கோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய கோமதி மற்றும் அவரது கணவர் குருநாதன் (36) ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், நவீன்குமாரின் மரணத்தின் பின்னணியில் இருந்த பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
போலீசார் விசாரணையின்படி, திருமணத்திற்கு முன்பே கோமதிக்கும் நவீன்குமாருக்கும் இடையே நட்பு இருந்துள்ளது. கோமதிக்கு திருமணமான பிறகும் இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் குருநாதனுக்கு தெரியவரவே, அவர் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் குடும்ப அமைதிக்காக கடந்த ஓராண்டாக நவீன்குமாருடன் பழகுவதை கோமதி தவிர்த்து வந்துள்ளார். ஆனால், நவீன்குமார் கோமதியைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து, தன்னுடன் தான் வாழ வேண்டும் எனக்கூறி கடுமையான தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
சம்பவத்தன்று கோமதியின் வீட்டிற்குச் சென்ற நவீன்குமார் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கோமதி, “நீ செத்துப்போ, நான் நிம்மதியாக இருப்பேன்” எனக் கூறிவிட்டு வெளியே சென்று அமர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த நவீன்குமார், வீட்டின் உள்ளே மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கயிறு அறுந்து விழுந்த சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்த கோமதி, பயந்துபோய் தன் கணவரை அழைத்துள்ளார். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நள்ளிரவில் நவீன்குமாரின் உடலை இழுத்துச் சென்று அவரது வீட்டின் வாசலில் போட்டுவிட்டு தப்பியுள்ளனர். தற்போது இருவர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவர்களைத் தர்மபுரி சிறையில் அடைத்துள்ளனர்.
