மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது குறித்த சமீபத்திய தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1.09 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.10,000 கோடிக்கும் மேல்) செலவிட்டுள்ளனர். இது ஜனவரியில் 1.65 பில்லியன் டாலராகவும், பிப்ரவரியில் 1.3 பில்லியன் டாலராகவும் இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் சற்றே குறைந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அதிகப்படியான டாலர்களைச் செலவழித்து வருவதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ் வெளிநாடுகளுக்குச் செல்லும் பணத்தை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. இந்தியர்களின் இந்த வெளிநாட்டுப் பயணச் செலவுகளில் பெரும்பகுதி, ‘பிற பயணங்கள்’ (Other Travel) எனப்படும் விடுமுறை மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்கே சென்றுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இத்தகைய சுற்றுலாப் பயணங்களுக்காகச் சுமார் 623.05 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது, இது அந்த மாதத்தின் மொத்த பயணச் செலவில் 60 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக, வெளிநாட்டுப் படிப்பு மற்றும் விடுதிச் செலவுகள் உள்ளடங்கிய கல்வி தொடர்பான பயணங்களுக்கு 450.16 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வியாபாரப் பயணங்கள் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான ஒட்டுமொத்தச் செலவு 21.39 மில்லியன் டாலராக மட்டுமே உள்ளது.
மேலும், வெளிநாட்டில் வாழும் நெருங்கிய உறவினர்களின் பராமரிப்பிற்காக அனுப்பப்பட்ட தொகையானது பிப்ரவரி மாதத்தில் 266.18 மில்லியன் டாலராக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 389.78 மில்லியன் டாலராகக் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்து வரும் சூழலில், இந்தியப் பணம் வெளிநாடுகளுக்கு அதிகளவில் செல்வது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை (Foreign Exchange Reserves) வெகுவாகப் பாதிக்கும் என்று பிரதமர் கவலை தெரிவித்திருந்தார். இதனாலேயே, அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்து நாட்டின் டாலர் இருப்பைச் சேமிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
