பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்திலுள்ள பிதுபூர் சந்தையில், ‘டயல் 112’ அவசர உதவிப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள், மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறவியிலேயே இரண்டு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்த 19 வயதான மனிஷ் குமார் என்ற வாலிபரே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு செருப்புக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள இரு கடைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு சிறிய தகராறு தொடர்பாக விசாரிக்க ஒரு பெண் காவலர் மற்றும் ஆண் காவலர் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. அப்போது அவர்கள் கடையில் இருந்தவர்களிடம் அநாகரிகமான வார்த்தைகளால் வசித்துள்ளனர். அங்கிருந்த மாற்றுத்திறனாளி வாலிபர் மனிஷ் குமார், அவ்வாறு கெட்ட வார்த்தைகளைப் பேச வேண்டாம் என்று தடுத்ததால், ஆத்திரமடைந்த காவலர்கள் அவரை இரக்கமின்றி மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களையும் எழுப்பியது. இந்த சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் வைஷாலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாற்றுத்திறனாளியைத் தாக்கிய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட ஒரு காவலரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.
