உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ஹர்பூர்-புதஹட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 45 வயதுடைய நபர் ஒருவர் தனது 19 வயதுடைய வளர்ப்பு மகளை (லிவ்-இன் துணையின் மகள்) கூட்டிக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். பாதிக்கப்பட்ட 45 வயது பெண்ணுக்கு முதல் திருமணத்தின் மூலம் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது முதல் கணவர் இவர்களைப் பிரிந்து டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ஏற்கனவே திருமணமான மற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்த 45 வயது நபர், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பெண்ணுடன் ‘லிவ்-இன்’ (Live-in) உறவில் வாழ்ந்து வந்துள்ளார்.
அந்தப் பெண்ணின் 19 வயது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தனது சொந்த தந்தை போலக் கருதி ‘அப்பா’ என்றே அழைத்து வந்துள்ளார். அந்த நபரும் குடும்பத்தில் ஒருவராகப் பழகி, அந்தப் பெண்ணின் மகள்களை கவனித்துக் கொள்வது போல் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மே 15ஆம் தேதி இரவு, அந்த இளம்பெண்ணை ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி அந்த நபர் கடத்திச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் இருந்து இருவரும் காணாமல் போனதை அறிந்த தாய், அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகளைத் தந்தை என்ற முறையில் நம்பியதாகவும், ஆனால் அவர் தங்களை ஏமாற்றி இத்தகைய கொடூரமான செயலைச் செய்துவிட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தனது மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சுவதாகவும், அவளது படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மகளைப் பத்திரமாக மீட்டுத் தருமாறு கோரியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த நபர் மற்றும் இளம்பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
