தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகரில், கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்த ஒரு கொடூரமான விபத்தில் அரசு மருத்துவமனையின் நர்சிங் அதிகாரி பிரிஸில்லா (Priscilla) உயிரிழந்துள்ளார். மே 16 அன்று அவர் தனது ஸ்கூட்டரில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரென காரின் கதவைத் திறந்துள்ளார். எதிர்பாராத விதமாக காரின் கதவு ஸ்கூட்டர் மீது மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த பிரிஸில்லா சாலையில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.
பிரிஸில்லா உடனடியாக மஹபூப்நகர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மறைவு, அவர் பணியாற்றிய மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தும்போது, பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரென கதவுகளைத் திறக்க வேண்டாம் என்றும், சிறிய அலட்சியம் கூட ஒருவரின் உயிரைப் பறிக்கும் பெரிய விபத்தாக முடிந்துவிடும் என்பதால் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
