தமிழக வரலாற்றிலேயே முதல்முறை… “லஞ்சம் கேட்டால் ரூ.1 லட்சம் சன்மானம்”… அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஷாக்…!

By Nanthini on வைகாசி 19, 2026

Spread the love

தமிழகத்தில் லஞ்சமற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி, “மக்கள் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொடமாட்டேன்” என்ற முதல்வரின் கொள்கை முழக்கத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்ச கலாச்சாரத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் முற்றிலும் வேரோடு ஒழிக்க வேண்டும் என்ற இலக்கோடு இந்த புதிய தூய்மை நிர்வாகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி திட்டத்தின் முக்கிய அம்சமாக, அரசுத்துறைகளில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைப் பற்றி பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தால், அவர்களுக்கு அரசு தரப்பில் ₹1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டாலும் பொதுமக்கள் பயமின்றி ஆதாரத்தோடு புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்களின் லஞ்சப் புகார்களை 24 மணி நேரமும் உடனுக்குடன் பதிவு செய்ய ஏதுவாக 1800 425 1555 என்ற பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் (Toll-Free Number) தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

   

முன்னதாக, தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க குண்டர் சட்டம் பாயும் என்றும், சட்டவிரோத மதுக்கடைகள் அகற்றப்படும் என்றும் எச்சரித்திருந்தார். மேலும், காவல் நிலையங்களில் புகார் அளிக்கும்போது பொதுமக்கள் வீடியோ எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, கட்சியின் பெயரைச் சொல்லி தவெகவினர் யாரும் அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லஞ்சம் இல்லாமல் அரசின் திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொரு குடும்பத்தின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கும் வகையில், ‘தமிழ்நாடு சிட்டிசன் கார்டு’ போன்ற அறிவியல் பூர்வமான திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.

   

முதலமைச்சர் விஜய் அவர்களே ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போல தினமும் உரிய நேரத்திற்குத் தலைமைச் செயலகம் வந்து பணியாற்றி ஒட்டுமொத்த அரசு இயந்திரத்திற்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், லஞ்சத்தை ஒழிக்க அரசு கொண்டு வந்துள்ள இந்த அதிரடி வெகுமதி திட்டம் சாமானிய மற்றும் ஏழை எளிய மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே வேளையில், அரசு அலுவலகங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் இத்திட்டம் பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக நிர்வாகத்தில் மிகப்பொரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.