தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் ‘தொங்கு சட்டசபை’ உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் சில இடங்கள் தேவைப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக சிறிய கட்சிகள் உருவெடுத்துள்ளன.
தற்போதைய சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் மிக முக்கியமான நிலையை எட்டியுள்ளன. இந்த மூன்று கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுத்து ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்தால் மட்டுமே தமிழகத்தில் புதிய அரசு அமைய முடியும். தவெக மற்றும் திமுக ஆகிய இரு தரப்புமே இந்த இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
குறிப்பாக, தவெக தலைவர் விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு (பகிர்வு) அளிக்கத் தயார் என்று தேர்தல் களத்திலேயே அறிவித்திருந்தது இக்கட்சிகளுக்குச் சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. இதனால் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளிக்குமா அல்லது தங்கள் பழைய கூட்டணியான திமுக-வுக்கே விசுவாசமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மூன்று கட்சிகளின் கைகளில்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது அடங்கியுள்ளது.
