லாட்ஜ் அறைக்குள் ரத்த வெள்ளத்தில் இளம்பெண்.. தூக்கில் இளைஞர்… இளைய சமூகத்தை உலுக்கும் சம்பவம்… சென்னையில் ஒரு ‘லைவ்’ கிரைம் த்ரில்லர்…!!!

By Muthu Mani on சித்திரை 24, 2026

Spread the love

சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம் ஜோடி மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை தங்குவதற்கு அறை எடுத்த சிறிது நேரத்தில், இளைஞர் மட்டும் காலை உணவு வாங்கச் செல்வதாகக் கூறி வெளியே சென்றுவிட்டு, பின் உணவு ஏதுமின்றி அறைக்குத் திரும்பியுள்ளார். இன்று காலை 10 மணி வரை நீண்ட நேரமாகியும் அவர்கள் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி மேனேஜர் ராஜேஷ் கதவைத் தட்டியுள்ளார்; எவ்வித பதிலும் வராததால் கதவில் உள்ள கண்ணாடி வழியாகப் பார்த்தபோது இருவரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியமேடு காவல் துறையினர், பூட்டியிருந்த கதவை உடைத்து இருவரின் உடல்களையும் மீட்டனர். அங்கு இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையிலும், இளம்பெண் கழுத்து மற்றும் மணிக்கட்டு அறுக்கப்பட்ட நிலையிலும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.

   

அறையில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டைகளை ஆய்வு செய்ததில், உயிரிழந்த பெண் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த பவ்யா (21) என்பதும், இளைஞர் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் (21) என்பதும் உறுதியானது. இவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் இடையிலான பழக்கம் எப்படி ஏற்பட்டது, காதலில் ஏற்பட்ட ஏதேனும் சிக்கலால் இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.