உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மனின் உண்மையான பெயர் ‘தடாதகை’ என்பதாகும். மலையத்துவஜ பாண்டிய மன்னனின் யாகத்தில் மூன்று மார்புகளுடன் தோன்றிய இவருக்கு, சிவபெருமானைச் சந்தித்தபோது அந்த மூன்றாவது மார்பு மறைந்ததாகவும், அதன் பின்னரே அவர் தனது கணவரை அடையாளம் கண்டுகொண்டார் என்பதும் வரலாறு. ‘மீனாட்சி’ என்ற பெயரை அன்னைக்குச் சூட்டியவர் அவரது கணவரான சிவபெருமான் தான். மீன்கள் எவ்வாறு தனது முட்டைகளை இமைக்காமல் பார்த்து குஞ்சு பொரிக்கச் செய்யுமோ, அதேபோல் தனது பக்தர்களைப் பார்த்தே அவர்களின் கர்ம வினைகளைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டவர் என்பதால் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
மதுரையில் மீனாட்சி அம்மன் பச்சை நிறத்தில் காட்சியளிப்பதற்குக் காரணம் அறிவிற்கும் கலைகளுக்கும் அதிபதியான புதன் கிரகத்தின் அம்சமாக அவர் திகழ்வதே ஆகும். அம்பிகையின் கையில் இருக்கும் கிளி பக்தர்களின் வேண்டுதல்களை அவரிடம் கொண்டு சேர்க்கும் தூதுவனாகக் கருதப்படுகிறது. இன்றும் மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கே பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு செங்கோல் வழங்கப்படுவது தனிச்சிறப்பாகும். ஆங்கிலேயர் காலத்தில் காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கப் பாதுகைகள் முதல், 1898-ஆம் ஆண்டுக்குப் பிறகு கல்வெட்டுகளில் இடம் பெற்ற மீனாட்சி – சொக்கநாதர் பெயர் மாற்றம் வரை இக்கோவிலில் பல சுவாரசியமான ஆன்மீக உண்மைகள் மறைந்துள்ளன.
