தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு அவரது மகன் சிபிராஜ் அளித்துள்ள பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுகவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர் சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, ‘தலைவா’ படப் பிரச்சினையின்போது விஜய் நடந்துகொண்ட விதத்தை மேடையில் நடித்துக் காட்டி கிண்டல் செய்த சத்யராஜின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
சத்யராஜின் இந்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், அவரது மகனும் நடிகருமான சிபிராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான அவர், விஜய் படங்களில் அடிக்கடி கூறும் பிரபலமான வசனமான, “உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்” என்ற வரிகளைக் குறிப்பிட்டுள்ளார். தந்தை ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்து விஜய்யை விமர்சித்தாலும், மகனாகிய சிபிராஜ் விஜய்யின் வசனத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தித் தந்தையின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
