உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளைத் தந்தையே கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் கித்வாய் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சசி ரஞ்சன் மிஷ்ரா என்பவரே, தனது மகள்களான ரித்தி மற்றும் சித்தி ஆகியோரை அதிகாலை நேரத்தில் கொலை செய்துள்ளார். மெடிக்கல் ரெப்-ஆகப் பணியாற்றி வரும் அவர், இந்தச் செயலைச் செய்த பிறகு தானாகவே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் தாயும், சசி ரஞ்சனின் மனைவியுமான ரேஷ்மா சேத்ரி அளித்த வாக்குமூலம் பல திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. 2014-ல் இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்ட போதிலும், ஆரம்பத்திலிருந்தே சசி ரஞ்சன் மதுவுக்கு அடிமையாகி மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவர், வீட்டின் அனைத்து இடங்களிலும், ஏன் படுக்கையறையில் கூட 6 கண்காணிப்பு கேமராக்களை (CCTV) பொருத்தித் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த இரவு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியுள்ளனர். பின்னர் சசி ரஞ்சன் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றுள்ளார். அதிகாலை 2:30 மணியளவில் அவர் ஒரு மகளைக் கழிவறைக்கு அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பியதை சிசிடிவி திரையில் பார்த்த மனைவி, பின்னர் அனைவரும் தூங்கிவிட்டதாகக் கருதி ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் சசி ரஞ்சன் தனது மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். “நானும் செத்துவிடுவேன், என் மகள்களையும் என்னோடு கூட்டிச் செல்வேன்” என்று அவர் அடிக்கடி கூறி வந்ததாக அவரது மனைவி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். தற்போது அந்த நபரைக் கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
