எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்‘ திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடித்து வருகின்றன. ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டிய இப்படம், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் தள்ளிப்போனது. இது தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பில் நீதிமன்றத்தை நாடியும் ஒரு மாத காலமாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பாளர், தற்போது மறுதணிக்கைக்காக விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், நடிகர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டில் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருவதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கை குழு திட்டமிட்டே இப்படத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் அலைமோதி வருகின்றன.
இந்த இக்கட்டான சூழலில், ஜனநாயகன் படத்தின் முழுப் பதிப்பும் இணையத்தில் கசிந்திருப்பது படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் படம் எடிட்டிங் நிலையில் இருந்தபோதே லீக் ஆகியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து தயாரிப்புத் தரப்பு தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, காவல்துறையிலும் முறைப்படி புகார் அளித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியே இன்னும் முடிவாகாத நிலையில், முழுப் படமும் இணையத்தில் வெளியானது ஒட்டுமொத்தப் படக்குழுவையும் நிலைகுலையச் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் அரசியல் களத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தணிக்கை வாரியம் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இது திட்டமிட்ட ஒரு சதி என்று குற்றம் சாட்டியுள்ளார். “அமித்ஷாவே நேரடியாக இதில் தலையிட்டு இந்த வேலையைச் செய்திருக்கிறார். திரைத்துறையில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிரான சித்தாந்தத்தை எடுத்தால், அவர்களை ஒடுக்க இப்படித்தான் செய்வார்கள்; இதுதான் அவர்களின் குணம்” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்சார் சிக்கல் முதல் படம் கசிந்தது வரை அனைத்தும் அரசியல் பின்னணி கொண்டது என்கிற ரீதியில் அவரது பேச்சு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
