தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் திமுக தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஸ்டார் தொகுதியாகக் கருதப்படும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது பேச்சில் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் செயல்பாடுகளை விமர்சிக்கும் தொனியில் பேசிய உதயநிதி, “நாங்கள் கொரோனா காலத்திலும் உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களுக்காக வீதியில் நின்று பணியாற்றினோம். ஆனால், சில பேர் இப்போது கூட வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். மற்றவர்களைப் போல நாங்கள் பிரேக் விட்டுப் பிரச்சாரம் செய்வதில்லை. சிலர் இன்று ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆகிவிட்டார்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். விஜய்யின் பிரச்சார இடைவெளிகளைச் சுட்டிக்காட்டிய அவர், திமுகவினர் எப்போதுமே மக்களுடன்தான் இருப்பார்கள் என்பதை வலியுறுத்தினார்.
தொடர்ந்து வேட்பாளர் இனிகோ இருதயராஜைப் பாராட்டிய உதயநிதி, அவருக்குப் பல தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு இருந்தும், “அங்க ஒரு கால், இங்க ஒரு கால்” என வைக்காமல் திருச்சி கிழக்கிலேயே உறுதியாக நிற்பதாகக் கூறினார். மேலும், “இனிகோ இருதயராஜுக்கு வொர்க் ப்ரம் ஹோம் (Work from home) அரசியல் எல்லாம் தெரியாது. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர் உங்கள் வீடு தேடி வருவார்; உதவிப் பொருட்கள் வாங்க உங்களை அவர் வீட்டுக்கு அழைக்க மாட்டார்” என்று விஜய்யின் பனையூர் இல்லச் சந்திப்புகளைச் சாடினார். இதன் மூலம் மக்கள் செல்வாக்கு யாரிடம் இருக்கிறது என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த உதயநிதி, அது இரண்டு தனித்தனி தொகுதிகள் என்று நினைத்துப் பேசும் “தற்குறி கூட்டத்திற்கு” தான் பதில் சொல்ல விரும்பவில்லை என ஆவேசமாகத் தெரிவித்தார். திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் இணைந்த ஒரே தொகுதி என்பது கூடத் தெரியாமல் பேசுபவர்களைப் புறந்தள்ளிவிட்டு, மக்கள் சேவையில் கவனம் செலுத்தப்போவதாக அவர் கூறினார். திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் விவரமானவர்கள் என்றும், அங்கு திமுகவின் வெற்றி உறுதி என்றும் நம்பிக்கையுடன் தனது உரையை நிறைவு செய்தார்.
