“ஜாதியை பார்த்து ஓட்டுப் போடுங்க” வேட்பாளர் நம்ம ஜாதிக்காரர்.. திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சை பேச்சு..!!

By Soundarya on சித்திரை 12, 2026

Spread the love

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காப்பிலியப்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், அங்குள்ள மக்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் எனச் சுட்டிக்காட்டியதுடன், அடுத்த முதலமைச்சராக வரப்போகும் எடப்பாடி பழனிசாமியும் அதே சமூகத்தைச் சேர்ந்த (வேறு பிரிவு) ஒருவர் என்று குறிப்பிட்டார். அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் நாட்டை ஆளப்போவது மகிழ்ச்சியான செய்தி என்றும், இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் ஜாதி ரீதியான கோரிக்கையை முன்வைத்தார்.

   

தேர்தல் பிரசாரத்தின் போது ஜாதி, மதங்களின் பெயர்களைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதியாகும். ஆனால், ஒரு முன்னாள் அமைச்சரே வெளிப்படையாக ஜாதியை முன்னிறுத்திப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜாதி ரீதியாக மக்களைத் திரட்ட முயன்ற அவரது இந்தப் பேச்சு தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு வழிவகுத்துள்ளது.