வேலூரில் தவெக வேட்பாளர் வினோத்கண்ணனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். குமாரபாளையம் அதிமுக பொதுக்கூட்டத்தில் தவெக கொடியைக் கண்டவுடன் “நல்ல காலம் பிறந்துவிட்டது” என எடப்பாடி பழனிசாமி பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர், இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லியால் ஓரங்கட்டப்பட்டு, எந்தவொரு அரசியல் அதிர்வையும் ஏற்படுத்த முடியாத நிலையில் தனித்து விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நடிகர் அஜித்தைப் பொறுத்தவரை அவர் எந்தவித அரசியல் அடையாளமும் இன்றி இயங்க விரும்பும் ஒரு எளிய மற்றும் உயர்ந்த மனிதர் என்று நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டினார். தனது தந்தை மறைவின் போது கூட ஒரு சாமானியனாகக் கடமைகளைச் செய்த அஜித்தின் கண்ணியத்தை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கோலாலம்பூரில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், அஜித்தைப் பற்றி பெருமையாகப் பேசியதையும் நினைவு கூர்ந்த அவர், இருவருக்கும் இடையேயான பரஸ்பர மரியாதையை விளக்கினார்.
சினிமாவைப் பற்றி எவ்வித புரிதலும் இல்லாத எடப்பாடி பழனிசாமி, தற்போது அஜித்தின் பெயரையும் நிழற்படத்தையும் தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார். அஜித்தின் புகழைத் தேர்தல் பரப்புரைக்குத் தவறாகப் பயன்படுத்துவதை “விபசாரம் செய்வதற்கு சமமானது” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் நாஞ்சில் சம்பத் சாடினார்.
