கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது ஓட்டுநர் இல்லாத வாகனம் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில், விமான நிலையத்தின் 51-வது பகுதியில் (Bay No. 51) இந்த விபத்து நிகழ்ந்தது. உணவு விநியோக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்யுவி (SUV) ரக வாகனம், திடீரென ஓட்டுநர் இன்றி நகர்ந்து சென்று, இண்டிகோ ஏ320 (A320) விமானத்தின் வலதுபுற இன்ஜின் பகுதியில் மோதியது.
இந்த விபத்தின்போது விமானத்தில் பயணிகள் அல்லது ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், விமானத்தின் இன்ஜின் பகுதியில் சேதம் ஏற்பட்டதால், அந்த விமானம் உடனடியாக ஆய்விற்காக நிறுத்தப்பட்டது. கொல்கத்தாவிலிருந்து கவுகாத்திக்கு செல்ல வேண்டிய இந்த விமானத்திற்குப் பதிலாக, பயணிகளின் வசதிக்காக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
