மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் ஈரான் – இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வர, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியைச் சிறந்த விளைவுகளைத் தரும் தலைவராகப் புகழ்ந்துள்ள டிரம்ப், தானும் மோடியும் ‘சொன்னதைச் செய்து முடிக்கும்’ ரகத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய பிறகு, முதன்முறையாக இரு தலைவர்களும் தொலைபேசியில் ஆலோனை நடத்தினர். இந்த உரையாடலின் போது, உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணையை அனைவரும் அணுகக்கூடிய வகையில் பாதுகாப்பாக வைத்திருப்பதன் அவசியத்தைப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் தலையீட்டிற்குப் பிறகு போருக்கான பதற்றம் படிப்படியாகத் தணிந்து வரும் நிலையில், ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கான காலக்கெடுவை ஏப்ரல் 6-ஆம் தேதி வரை டிரம்ப் நீட்டித்துள்ளார். ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், பேச்சுவார்த்தைகள் மிகவும் திருப்திகரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி அளித்துள்ளார். இரு வல்லரசுத் தலைவர்களின் இந்த இராஜதந்திர நகர்வுகள், போர் மேகங்களைச் சீக்கிரம் கலைக்கும் என்ற நம்பிக்கையை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
