“எண்ணிக்கை உங்க இஷ்டம்.. தொகுதி என் இஷ்டம்”… கூட்டணி கட்சிகளை ‘குழியில்’ தள்ளிய எடப்பாடி? அதிரும் அரசியல் களம்!

By Muthu Mani on பங்குனி 27, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள தொகுதிப் பங்கீடு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு 27, பாமகவிற்கு 18, அமமுகவிற்கு 11 மற்றும் தமாகாவிற்கு 5 தொகுதிகள் என ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், திமுகவின் செல்வாக்குமிக்க அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தற்போதைய எம்.எல்.ஏ-க்களாக உள்ள தொகுதிகள் பலவற்றை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளார். இது அதிமுகவின் வெற்றியை உறுதி செய்வதை விட, கூட்டணி கட்சிகளை இக்கட்டான சூழலில் தள்ளும் ஒரு ‘மாஸ்டர் பிளான்’ என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, பாஜகவிற்கு அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை, அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர் மற்றும் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் போன்ற கடினமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், அமமுகவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை மற்றும் கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதிகளும், தமாகாவிற்கு அமைச்சர் முத்துசாமியின் ஈரோடு மேற்கு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக அதிமுகவாலேயே வெற்றி பெற முடியாத இந்தத் தொகுதிகளைக் கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்கியது, எடப்பாடி பழனிசாமியின் ஒருவித ‘அரசியல் தண்டனை’ என்றே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. தாமரை சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுத்த கட்சிகளுக்குப் பாடம் புகட்டவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

   

கொங்கு மண்டலத்தில் தனக்கு இணையாக வளர்ந்து வரும் அண்ணாமலையை முடக்கும் வகையில், அவரது சொந்த மாவட்டமான கரூரில் பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. கோவையிலும் ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், அண்ணாமலை போட்டியிடுவதே கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், இரட்டை இலை சின்னத்தைத் தவிர்த்துவிட்டுத் தாமரை சின்னத்தைத் தேர்வு செய்த ஜி.கே.வாசனின் தமாகாவிற்கு, வெற்றி வாய்ப்பே இல்லாத 5 தொகுதிகளை ஒதுக்கி எடப்பாடி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதேநேரம், தவெக தலைவர் விஜய் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியைப் பாமகவிற்கு ஒதுக்கியதன் மூலம், விஜய்யின் வெற்றிக்குச் மறைமுகமாகச் சாதகமான சூழலை உருவாக்கி, எதிர்காலக் கூட்டணிக்கான அச்சாரத்தை எடப்பாடி போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

   

கூட்டணி கட்சிகள் கேட்ட எண்ணிக்கையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி, அதே நேரத்தில் கடினமான தொகுதிகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள 169 தொகுதிகளைத் தனது கைவசம் வைத்துள்ளார். இதன் மூலம் பலமான அமைச்சர்களுக்கு எதிராகக் கூட்டணி கட்சிகளை மோதவிட்டு, அதிமுகவின் செல்வாக்குள்ள தொகுதிகளில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்தி ஆட்சியைக் கைப்பற்ற அவர் திட்டமிட்டுள்ளார். கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதை விட, கேட்கும் எண்ணிக்கையைக் கொடுத்துவிட்டுச் சவாலான களங்களைக் கூட்டணி கட்சிகளிடம் தள்ளிவிட்ட எடப்பாடியின் இந்த ‘கொங்கு ஸ்கெட்ச்’, வரும் தேர்தலில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.