“திருப்பரங்குன்றம் டூ மதுரை வடக்கு நோ சீட்”… சரவணனுக்கு விழுந்த மரண அடி… அதிரடியில் இறங்கிய டாக்டர்..!!

By Muthu Mani on பங்குனி 24, 2026

Spread the love

தமிழக அரசியலில் ‘கட்சித் தாவல்’ படலங்களுக்குப் பெயர்போன மருத்துவர் சரவணன், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு அரசியல் மாற்றத்திற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக, பாஜக எனப் பயணித்து தற்போது அதிமுகவில் இருக்கும் அவர், மதுரை வடக்குத் தொகுதியைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். கடந்த காலங்களில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக எம்எல்ஏ-வாக வென்றவர், பின்னர் அக்கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட பிணக்காலுலும், சீனியர் நிர்வாகிகள் மூர்த்தி மற்றும் தளபதி ஆகியோரின் எதிர்ப்பாலும் பாஜகவிற்குத் தாவினார். அங்கு மதுரை வடக்கில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய நிலையில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சர்ச்சைக்குப் பின் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இணைந்த பிறகு, கடந்த லோக்சபா தேர்தலில் யாரும் முன்வராத சூழலில் மதுரையில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சரவணன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது மதுரை வடக்குத் தொகுதியைத் தக்கவைக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தபோது பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் மூலம் தனது பலத்தைக் காட்டினார். இதற்கு எடப்பாடியும் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது கூட்டணியில் இணைந்துள்ள தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் திருமாறன் அத்தொகுதியைக் கோருவது சரவணனுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. இது ஒருபுறமிருக்க, மதுரையின் அதிமுக சீனியர்களான செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகிய மூவர் கூட்டணியும் சரவணனுக்கு சீட் கிடைக்காமல் இருக்கத் தீவிரமாக காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

   

மதுரை வடக்குத் தொகுதியைத் தவிர வேறு எங்கும் சரவணனால் வலுவாகப் போட்டியிட முடியாது என்பதை உணர்ந்தே இந்த மூவர் கூட்டணி அவருக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால் அதிமுகவில் சீட் மறுக்கப்படும் சூழல் உருவானால், மருத்துவர் சரவணன் தனது அடுத்த இலக்காக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைத் (TVK) தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ஒரு புதிய கட்சிக்குத் தாவுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருப்பதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், அவரது அரசியல் பயணம் அடுத்த கட்டமாக எங்கே செல்லும் என்பது மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.