“எங்க வந்து யாருக்கிட்ட..கொங்குவில் உதயநிதி ஆடப்போகும் அரசியல் ஆட்டம்”…. பரபரக்கும் தமிழக அரசியல் களம்….!

By Nanthini on பங்குனி 24, 2026

Spread the love

வரவிருக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொங்கு மண்டலம் உட்பட ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் திமுகவின் கோட்டை என்பதை இந்தத் தேர்தலில் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று முழங்கினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே ‘களத்தில் இளைஞர் அணி’ என்ற முன்னெடுப்பின் மூலம், நிர்வாகிகள் அனைவரும் வீடு வீடாகச் சென்று தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

திமுக அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இளைஞரணியின் முதன்மைப் பணி என்று குறிப்பிட்ட உதயநிதி, விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற முன்னோடித் திட்டங்களைப் பட்டியலிட்டார். குறிப்பாக, ‘தமிழ்ப் புதல்வன்’ மற்றும் ‘புதுமைப் பெண்’ திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை மற்றும் 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மடிக்கணினிகள் ஆகியவை தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

   

மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி மற்றும் மெட்ரோ திட்டங்களுக்கான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். புதிய கல்விக் கொள்கையைத் திணிப்பதன் மூலம் மாநில உரிமைகளைப் பறிக்கப் பார்க்கும் பாஜகவை எதிர்த்து நிற்கும் ஒரே முதுகெலும்புள்ள தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டுமே என்று அவர் புகழாரம் சூட்டினார். மேலும், அதிமுகவின் முடிவுகள் அனைத்தும் டெல்லியில் உள்ள அமித்ஷா வீட்டிலேயே எடுக்கப்படுவதாகக் கூறி, அதிமுகவை ‘அடிமைக் கூட்டம்’ என்று சாடினார்.

   

தேர்தலுக்கு இன்னும் 32 நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையிலும் திமுகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க இளைஞரணியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட, இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதே இலக்காக இருக்க வேண்டும் என்றும், தங்களின் கடின உழைப்புதான் வருங்கால தகுதியையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் உற்சாகமூட்டினார்.