மேற்காசியப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐந்து நாட்களுக்குப் போர் நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்பஹான் நகரில் உள்ள எல்பிஜி நிர்வாகக் கட்டிடம் மற்றும் கோர்ரஷஹர் பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு குழாய் அமைப்புகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், இதில் கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணுசக்தி கொள்கை தொடர்பான மோதல்கள் முற்றிய நிலையில், கடந்த பிப்ரவரி முதல் ஈரான் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியான சூழலில், தற்போது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உலக சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஈரானின் பங்கு முக்கியமானது என்பதால், இதுபோன்ற தாக்குதல்கள் சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் பொருளாதார மாற்றங்களை உருவாக்கும் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது
