என் ஆட்சியில் பெண்கள் நள்ளிரவிலும் கூட அச்சமின்றி நடக்கலாம்… சீமானின் அதிரடி தேர்தல் அறிக்கை..!!

By Soundarya on பங்குனி 19, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் 2026 தேர்தல் அறிக்கையைச் சென்னையில் இன்று (மார்ச் 19, 2026) வெளியிட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆட்சி மாற்றத்தை விட அரசியல் மாற்றமே காலத்தின் கட்டாயம் என முழங்கினார். அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் பெண்கள் நள்ளிரவிலும் எவ்வித அச்சமுமின்றி, தனித்து பாதுகாப்பாகச் செல்லக்கூடிய சூழல் உருவாக்கப்படும். பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் சட்டங்களால் மட்டும் அல்லாமல், ஒரு பண்பாட்டு மாற்றமாக நிலைநாட்டப்படும்” என உறுதியளித்தார்.

பெண்கள் பாதுகாப்பிற்குத் தனது கட்சியினரின் ஒழுக்கமே சாட்சி என்று குறிப்பிட்ட சீமான், “லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற நமது கட்சியின் மாநாடுகளில் இதுவரை எந்தவொரு பெண்ணுக்கும் சிறு பாலியல் சீண்டல் கூட நிகழவில்லை. ஆண்களும் பெண்களும் சரிசமமாகப் பங்குகொள்ளும் ஒரு களத்தில், பெண்களைத் தாயாகவும் சகோதரியாகவும் கருதும் ஒழுக்கத்தை என் தம்பிகளுக்கு நான் கற்பித்துள்ளேன். இந்தத் தார்மீக ஒழுக்கமே நாளை எங்கள் ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

   

மேலும், தனது தேர்தல் அறிக்கையில் விவசாயத்தை அரசுப் பணியாக்குவது, தரமான இலவசக் கல்வி மற்றும் மருத்துவம் போன்ற முக்கிய வாக்குறுதிகளுடன், பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என்பதையும் அவர் வலியுறுத்தினார். “பெண்கள் ஒடுக்கப்படும் வரை எவராலும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியாது” என்ற மேதகு பிரபாகரனின் வரிகளை மேற்கோள் காட்டிய அவர், தங்களது ‘செயற்பாட்டு வரைவு’ வெறும் வாக்குறுதி அல்ல, அது தமிழினத்தின் விடியலுக்கான கனவு என்றும் உணர்ச்சிப்பொங்கப் பேசினார்.