தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய தமிழக வருகைகள் மற்றும் அவரது உரைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. மதுராந்தகம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்தக் கூட்டங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற போதிலும், பிரதமர் தனது உரையில் ஒருமுறை கூட ‘அதிமுக’ என்ற பெயரையோ அல்லது எடப்பாடி பழனிசாமியின் பெயரையோ குறிப்பிடவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் திமுக அரசின் மீதான விமர்சனங்களை முன்வைத்த பிரதமர், கூட்டணி கட்சியான அதிமுகவின் சாதனைகள் குறித்தோ அல்லது அக்கட்சியின் தலைமை குறித்தோ மௌனம் காத்தது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பிரதமரின் இந்த மௌனம் எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட ஒரு நுட்பமான ‘அரசியல் சிக்னல்’ என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிமுகவினர் தங்களை தனிப்பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியாக முன்னிறுத்தினாலும், பாஜாகவைப் பொறுத்தவரை இது ஒரு ‘கூட்டணி ஆட்சி’ என்ற இலக்கிலேயே பயணிக்க விரும்புவதை மோடியின் பேச்சு உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.
இது குறிப்பாக, பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்டது போன்ற ஒரு அரசியல் சூழலை தமிழகத்திலும் பாஜாக எதிர்பார்க்கிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இருப்பினும், பிரதமர் தனது உரையில் ‘பாஜக ஆட்சி’ என்று குறிப்பிடாமல் ‘தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி’ என்று குறிப்பிட்டது, கூட்டணியை அங்கீகரிப்பதைக் காட்டினாலும், அதிமுகவின் தனித்துவமான ஆதிக்கத்தை அவர் முழுமையாக ஏற்கவில்லை என்பதையே காட்டுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
