தமிழகத்தில் நிலவி வரும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல் கையிருப்பு குறித்த தற்போதைய சூழல் குறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்கள் அடுத்த 25 நாட்களுக்குத் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி சிலிண்டர்களைப் பதுக்கினாலோ அல்லது உணவுகளின் விலையை உயர்த்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மறுபுறம், சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாகக் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், தமிழகத்தில் பெட்ரோல் கையிருப்பு இந்த மாதம் வரை மட்டுமே இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டது போன்ற காரணங்களால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் பரவி, பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து கேன்களில் எரிபொருளைச் சேமித்து வைக்கும் நிலை உருவாகியுள்ளது. தற்போது பெட்ரோல் தட்டுப்பாடு உடனடியாக இல்லை என்றாலும், எதிர்காலத் தேவையை முன்னிட்டு மக்கள் காட்டும் ஆர்வம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
