செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனது தோழிகளான 14 மற்றும் 16 வயது சிறுமிகளுடன் சென்னை மெரினா கடற்கரைக்குச் சுற்றுலா வந்துள்ளார். இரவு நீண்ட நேரமானதால், 14 வயது சிறுமி தனது பெற்றோரிடம் தோழி வீட்டில் தங்குவதாகத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் நள்ளிரவு நேரத்தில், அந்தச் சிறுவன் தனது இருசக்கர வாகனத்தில் இரு சிறுமிகளுடன் மதுராந்தகம் நோக்கிச் சென்றுள்ளார். அவர்கள் தேவத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
மர்ம நபர்கள் துரத்துவதைக் கண்டு அச்சமடைந்த சிறுவன், வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளார். அத்திவாக்கம் காட்டுப் பகுதி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர்கள், சிறுவன் மற்றும் 16 வயது சிறுமியை மிரட்டித் துரத்திவிட்டு, 14 வயது சிறுமியை மட்டும் வலுக்கட்டாயமாக ஏரிப் பகுதிக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு அந்தச் சிறுமி இருவராலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்று, அப்பகுதியினரின் உதவியுடன் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமியின் உடல்நிலை மற்றும் நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்த மருத்துவர்கள், உடனடியாக மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பியோடிய மற்ற குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் பைக் ரைடு சென்ற சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை இச்சம்பவம் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
