“யார் வந்தாலும் விடமாட்டேன்!”.. “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கோட்டையை வென்ற டிடிவி.. அதிரும் அரசியல் களம்..!”

By Muthu Mani on பங்குனி 11, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. அமமுக சார்பில் 13 தொகுதிகள் கோரப்பட்ட நிலையில், தற்போது 7 பொதுத்தொகுதிகள் மற்றும் 2 தனித்தொகுதிகள் என மொத்தம் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மிக முக்கியமாக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி அமமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாகக் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆண்டிப்பட்டி தொகுதி என்பது அதிமுக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாகும். மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ‘சென்டிமென்ட்’ தொகுதி இது. 1984-ல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபடியே இத்தொகுதியில் வென்று முதல்வரானார். அதேபோல், 2002 இடைத்தேர்தல் மற்றும் 2006 பொதுத்தேர்தலில் ஜெயலலிதா இங்கிருந்து தேர்வாகி சட்டசபைக்குச் சென்றார். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தொகுதியை டிடிவி தினகரன் தேர்வு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

டிடிவி தினகரன் இத்தொகுதியைத் தேர்வு செய்ததற்கு மற்றொரு முக்கியக் காரணம், அங்குள்ள சமூக ரீதியான வாக்கு வங்கி ஆகும். ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் சுமார் 30 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். முக்குலத்தோர் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் தினகரனுக்கு, இது கூடுதல் பலமாக அமையும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதமே, “கூட்டணி அமைத்தாலும், தனியாக நின்றாலும் ஆண்டிப்பட்டியில்தான் போட்டியிடுவேன்” என்று அவர் உறுதியாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

   

இருப்பினும், அதிமுகவின் மூன்று முன்னாள் முதல்வர்கள் போட்டியிட்ட இந்தத் தொகுதியை அமமுகவுக்கு விட்டுக்கொடுத்ததில் அதிமுகவின் ஒரு தரப்பினர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2019 மற்றும் 2021 தேர்தல்களில் இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போதைய எம்.எல்.ஏ மகாராஜனை எதிர்த்து தினகரன் களம் காண உள்ளார். ஏற்கனவே தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுள்ள அனுபவம் உள்ளதால், அதிமுகவினரைச் சமாதானப்படுத்தி ஒருமித்த ஆதரவுடன் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அமமுகவினர் காத்திருக்கின்றனர்