2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்த பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மைதானத்தில் வெளிப்படுத்திய உணர்ச்சிகரமான தருணங்கள் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் மண்ணை எடுத்துத் தனது நெற்றியில் ஒற்றிக்கொண்ட அவர், இந்த வெற்றி மண்ணிற்குச் சமர்ப்பணம் என்பது போல மண்டியிட்டுத் தனது நன்றியைத் தெரிவித்தார். உலகக்கோப்பையை வென்ற கேப்டனாகத் தனது கனவு நனவான அந்த நொடியில், மைதானத்தின் புனிதத்தை அவர் போற்றிய விதம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
View this post on Instagram
வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு இடையே, இந்திய அணியின் நீண்டகால ‘த்ரோ-டவுன்’ (Throw-down) நிபுணரான ரகுவின் காலில் விழுந்து சூர்யகுமார் யாதவ் ஆசி பெற்ற காட்சி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகால கடும் உழைப்பிற்கும், பயிற்சியின் போது தனக்கு உறுதுணையாக இருந்த பின்னணிப் பணியாளர்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவர் இந்தச் செயலைச் செய்துள்ளார். வெற்றிக் களிப்பிலும் தனது பணிவையும், உழைப்பிற்குப் பின்னால் இருந்தவர்களையும் மறக்காத சூர்யகுமாரின் இந்த பண்பு, ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம் எனப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
