கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு காலணி கடை, வெறும் 1 ரூபாய் நாணயத்திற்கு காலணிகள் வழங்கப்படும் என்ற அதிரடிச் சலுகையை அறிவித்திருந்தது. இந்த விளம்பரத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதலே கடையின் முன் குவியத் தொடங்கினர். விடியற்காலையிலேயே கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
நேரம் செல்லச் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரிசையில் நின்றவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சூழல் மோசமடைந்ததைக் கண்ட போலீசார், கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். நிலைமை கைமீறிச் சென்றதால், வேறு வழியின்றி போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விளம்பரத்திற்காகப் பொதுமக்களின் பாதுகாப்பை அடமானம் வைத்த இச்சம்பவம் கோழிக்கோடு பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
