திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் நேற்று அரங்கேறிய ரவுடிகளின் வெறிச்செயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது பேர் கொண்ட மர்ம கும்பல், கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களைக் கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அருகில் இருந்த தேநீர் கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அந்த இடத்தையே போர்க்களமாக மாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிய நிலையில், அந்த ரவுடி கும்பல் யாரையும் விடாமல் துரத்திச் சென்று தாக்கியது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலில், தப்பி ஓட முடியாமல் சிக்கிய மாற்றுத்திறனாளியான ஜான் (50) மற்றும் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த ஒரு வடமாநிலத் தொழிலாளி என இருவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். கஞ்சா போதையில் இருந்த ரவுடிகளின் இந்த வெறிச்செயலால் நாங்குநேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த இரட்டைக் கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த ஒன்பது பேர் கொண்ட ரவுடி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
