தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வழக்கம் போல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தனது வேட்பாளர் பட்டியலைச் சமூகப் பிரதிநிதித்துவ அடிப்படையில் வெளியிட்டுள்ளது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உறுதிப்படுத்தியுள்ள இந்த விபரங்களின்படி, தமிழகத்தின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பரவலாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறிப்பாக, வன்னியர் சமூகத்திற்கு 34 இடங்களும், பறையர் சமூகத்திற்கு 27 இடங்களும் இதில் 4 பொதுத்தொகுதிகள், கவுண்டர் சமூகத்திற்கு 24 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு 15 இடங்களும், கள்ளர் மற்றும் நாடார் சமூகங்களுக்கு தலா 11 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் மற்றும் பிற சமூகங்களைப் பொறுத்தவரை, இஸ்லாமியர்களுக்கு 10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறவர் சமூகத்திற்கு 10, அகமுடையார் 9, பிள்ளைமார், கோணார், முதலியார் மற்றும் முத்தரையர் ஆகிய சமூகங்களுக்குத் தலா 8 இடங்களும், உடையார் சமூகத்திற்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பிராமண சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர் சமூகத்திற்கு 5 இடங்களும், அருந்ததியர் மற்றும் நாயக்கர் சமூகங்களுக்குத் தலா 3 இடங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக நாம் தமிழர் கட்சி முன்னிறுத்துகிறது.
