ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா பகுதியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றிய பிரமிளாவின் மரணம், வெறும் தற்கொலை அல்ல; அது ஒரு சமூகக் கொலை. கணவனை இழந்த துக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிற்கு, அவளது கருப்பையில் வளர்ந்த உயிர் ஒரு வரமாக அமைந்தது. ஆனால், அந்த வரமே அவளுக்குச் சாபமாக மாற்றப்பட்டது. “மாதவிடாய் ஒழுங்கற்ற நிலை” (Irregular periods) என்ற மருத்துவக் காரணத்தால், தனது கருவுறுதலைத் தாமதமாக உணர்ந்த அந்தப் பெண்ணின் மென்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ள இந்தச் சமூகம் தவறிவிட்டது. கணவர் இறந்து ஐந்து மாதங்கள் ஆன நிலையில் அவள் கர்ப்பமாக இருந்ததை, அறிவியல் ரீதியாக அணுகாமல் அவதூறாகப் பார்த்ததே இந்தத் துயரத்தின் தொடக்கம்.
பள்ளி மாணவர்கள் இருவர், ஒரு ஆசிரியையை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றது கல்விச் சூழலின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. பழைய ஆய்வகத்தில் அவர் ஒருவருடன் பேசியதை தவறாகச் சித்தரித்து, புகைப்படங்களை காட்டி மிரட்டிய அந்த மாணவர்களின் செயல் வன்மத்தின் உச்சம். ஒரு பெண்ணின் நடத்தையைச் சந்தேகிப்பதன் மூலம் அவளை எளிதாக உடைத்துவிடலாம் என்ற ஆணாதிக்க மனநிலை, பிஞ்சு மனங்களிலேயே நஞ்சாகப் புகுந்திருப்பது வேதனையளிக்கிறது. “உன் குழந்தைக்கு அம்மா இல்ல address இல்லாமல் போயிடுவாள்” என்ற மிரட்டல், ஒரு தாயின் மனதை எந்தளவுக்குச் சிதைத்திருக்கும் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.
சமூகத்தின் கேலிப்பேச்சுகளுக்கும், உறவினர்களின் சந்தேகப் பார்வைகளுக்கும் அஞ்சி, தன் வயிற்றில் வளர்ந்த கணவனின் கடைசி அடையாளத்தைக் காக்க முடியாமல் பிரமிளா தற்கொலை செய்துகொண்டது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியை நம்முன் வைக்கிறது. ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதற்குச் சமூகத்திடம் ‘சான்றிதழ்’ பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது எவ்வளவு கொடுமையானது? மிரட்டிய மாணவர்கள் இன்று சீர்திருத்தப் பள்ளியில் இருக்கலாம், ஆனால் பிரமிளாவுக்கு ஏற்பட்ட அந்த மன உளைச்சலுக்கும், அநியாயமாகப் பறிபோன அந்த இரு உயிர்களுக்கும் யார் பொறுப்பேற்பது?
உண்மையில் பிரமிளாவைக் கொன்றது அந்த மாணவர்கள் மட்டுமல்ல; ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைத் துப்பறியும் சமூகத்தின் பொதுப்புத்தியும் தான். வதந்திகளை ரசிப்பதையும், ஒருவரின்Character அசாசினேஷன் (Character Assassination) செய்வதையும் பொழுதுபோக்காகக் கொண்ட சமூகம் இருக்கும் வரை, இன்னும் பல பிரமிளாக்கள் மௌனமாகவே மாய்ந்து போவார்கள். சட்ட ரீதியான தண்டனைகளைத் தாண்டி, சக மனிதர்களின் உணர்வுகளை மதிக்கும் பண்பும், அறிவியல் தெளிவும் நம்மிடையே வளராத வரை இத்தகைய தியாகங்களுக்கு விடிவு என்பதே இல்லை.
