மதுரை அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு அடுத்தடுத்து சறுக்கல்கள் ஏற்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மு.க.அழகிரியின் நம்பிக்கைக்குரிய தளபதியும், முன்னாள் துணை மேயருமான மன்னன் அதிமுகவில் இணைந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள், இன்று மற்றொரு முக்கிய நகர்வு அரங்கேறியுள்ளது. கள்ளிக்குடி திமுக மாவட்ட கவுன்சிலர் சரவண பாண்டியன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை முறைப்படி அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இந்த அரசியல் மாற்றம் வெறும் தனிநபர் மாற்றமாக மட்டுமில்லாமல், திமுகவின் கீழ்மட்ட நிர்வாகிகளிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சரவண பாண்டியனுடன் சேர்த்து, திமுக இளைஞரணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாஜகவில் ஐக்கியமானது அக்கட்சிக்கு அப்பகுதியில் பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மதுரை கோட்டையில் அடுத்தடுத்து நிகழும் இந்த வெளியேற்றங்கள், வரவிருக்கும் தேர்தல்களில் மாவட்ட அரசியலின் போக்கை மாற்றுமா என்ற விவாதத்தை அரசியல் விமர்சகர்களிடையே கிளப்பியுள்ளது.
