#Breaking: தென் மண்டல திமுகவில் அதிரடி திருப்பம்… நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் அதிமுகவில் தடம் பதித்த ‘தளபதி’… செம ஷாக்கில் ஸ்டாலின்….!

By Nanthini on மாசி 17, 2026

Spread the love

தமிழக அரசியலில் தென்மாவட்டங்களில் முக்கியத் திருப்பமாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நம்பிக்கைக்குரிய ‘வலதுகரமாக’ அறியப்பட்ட பி.எம்.மன்னன் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-இன் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பி.எம்.மன்னனுடன் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரும் தங்களை அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். கடந்த 2006-2011 காலகட்டத்தில் மதுரை மாநகராட்சியின் துணை மேயராகப் பணியாற்றிய மன்னன், மதுரையில் ஆளுமைமிக்க அரசியல் முகமாகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மற்றும் தென்மண்டல திமுகவில் ஒருகாலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த பி.எம்.மன்னனின் இந்த இடமாற்றம், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்துள்ள மன்னன், அதிமுகவில் இணைந்தது அந்தப் பகுதியில் அக்கட்சியை மேலும் வலுப்படுத்தும். இந்தத் திடீர் அரசியல் நகர்வு, தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியில் கணிசமான பாதிப்பை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.