திரைத்துறையில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண், நிஜ வாழ்க்கையில் ஒரு சிறந்த மனிதநேயப் பண்பாளர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் அதிநவீனப் பரிசோதனைக் கருவியைத் தனது சொந்தச் செலவில் வாங்கி வழங்கி, பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களைப் பராமரித்து வரும் ஸ்ரீமாதா புற்றுநோய் மருத்துவமனையின் சேவைகளால் ஈர்க்கப்பட்ட ஹரிஷ் கல்யாண், ஏற்கனவே அவர்களுக்கு நிதியுதவி செய்திருந்தார். தற்போது புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளித்தால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நோக்கத்தோடு, இந்த விலையுயர்ந்த மருத்துவ உபகரணத்தை அவர் தானமாக வழங்கியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் பேசிய ஹரிஷ் கல்யாண், “மற்றவர்களுக்கு உதவும் குணம் எனது தந்தை மூலமாக எனக்குக் கிடைத்தது. நம்மால் முடிந்த உதவியைச் சமூகத்திற்குச் செய்ய வேண்டும் என்று அவர் எப்போதும் கூறுவார். ஒரு பரிசுப் பொருளைத் திறந்து பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இந்த மருத்துவக் கருவி பல உயிர்களைக் காக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில் காதல் நாயகனாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், ‘லப்பர் பந்து’ போன்ற சமீபத்திய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். தற்போது மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அவரை, அவரது ரசிகர்கள் “திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் நீங்கள்தான் ரியல் ஹீரோ” என்று சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
