தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் (தோராயமாக ஏப்ரல் 11 அல்லது 15-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சுமார் 65 நாட்களே உள்ளதால், பாஜக நிர்வாகிகள் இப்போதே தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகக்கூடும் என்றும், பல கட்டங்களாக நடைபெறும் தேர்தல்களில் தமிழகத்திற்கு முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வமான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இதுவரை வெளியிடவில்லை. தற்போது தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது; தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
