தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்துவது குறித்த முதற்கட்ட ஆய்வுகளை இந்தியத் தேர்தல் ஆணையக் குழு சென்னையில் இரண்டு நாட்களாக மேற்கொண்டது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில், வாக்குப்பதிவுக்கான தயார் நிலைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் மற்றும் ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகத் தேர்தல் ஆணையக் குழு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் வரும் பிப்ரவரி 26-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் தமிழக அரசின் உயரதிகாரிகளுடன் இறுதி கட்ட ஆலோசனைகளை நடத்திய பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
